ராமர் பாலம் என்று சொல்லப்படுகின்ற இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் மன்னாருக்கும் இடையில் காணப்படும் மணற் திட்டுக்கள் வழியினூடாக அல்லாமல் மாற்றுப் பாதையில் கடலை ஆழப்படுத்தும் சேதுக் கால்வாய் திட்டத்தை முன்னெடுப்பது பொருளாதார ரீதியிலும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ரீதியிலும் பலன் தராது என இந்திய அரசு நியமித்த உயர்மட்ட நிபுணர் குழு முடிவு தெரிவித்துள்ளதாக இந்திய அரசு இந்திய உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.பச்சோரி தலைமையிலான நிபுணர் குழு தந்துள்ள அறிக்கை
தொடர்பில் அரசாங்கம் இன்னும் முடிவு எடுக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் அரசு
தரப்பு தலைமை வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
மாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய் அமைக்கப்படும்போது கப்பல்
ஒன்றிலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்படும் பட்சத்தில் அப்பிராந்தியத்தின் இயற்கைச்
சூழல் பாதிக்கப்படும் என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
கப்பல் போக்குவரத்துக்காக கடலை ஆழப்படுத்தும் சேது சமுத்திரத்
திட்டம் இந்துக்களால் ராமர் கட்டிய பாலம் என நம்பப்படும் இடத்தை
சேதப்படுத்திவிடும் என்று முறையிட்டு தொடுக்கப்பட்ட வழக்குகளை இந்திய
உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
தற்போது மணற் திட்டுகளாக அமைந்துள்ள இந்த இடத்தை பாதுகாக்கப்பட
வேண்டிய பாரம்பரியச் சின்னமாக இந்திய அரசு கருதுகிறதா என்ற நீதிமன்றத்தின்
கேள்விக்கு இந்திய அரசு இன்னும் பதில் தந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment